

சென்னை,
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்பாகவும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்கலாம்.
கடந்த ஆண்டை விட கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 2,500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சில கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை. தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு மையம் மூலம் 2 லட்சம் அலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. தேவையற்ற அழைப்புக்களை தவிர்க்க வேண்டும். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் கடும் கடுமையாக்கப்படும். திருமண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் பயன்பெற தனியாக இந்த கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.