“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க”வாழ்த்துகளோடு குட்டும் வைத்த ஸ்டாலின்...

உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க”வாழ்த்துகளோடு குட்டும் வைத்த ஸ்டாலின்...
Published on

சென்னை,

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்-அமைச்சர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய்.

இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் தன்னுடைய முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து உள்ளீர்கள், எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் சொன்னதைப் படிப்படியாக நிறைவேற்ற முயற்சிப்பேன், நிறைவேற்றுவேன். அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால், முகத்தை மூடிக்கொண்டு சந்திப்பதோ, மறைமுகமாக உங்களுக்கு தெரியாமல் சந்திப்பதோ, அப்படி எல்லாம் செய்யமாட்டேன், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நான் செய்வேன்.

மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவிடவும் மாட்டான்.

ஜெயித்துவிட்டோம், ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள்.

முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். என் அரசில் ஒரே அதிகாரம்தான். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. தமிழக அரசின் தற்போதைய நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்;

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் நமது சமரசமற்ற அடிப்படை கோட்பாடு. சிறுபான்மை சகோதரர்களுக்கு நமது தவெக அரசு கூடவே நிற்கும்.. இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களுக்கான முகம் தான் இந்த விஜய்யின் முகம்.இதில் 100 சதவீதம் விஜய்யை நீங்கள் நம்பலாம் என்றார்.

இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் மத்திய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com