கால்வாய்களில் குப்பைகளை கொட்டாதீர்கள்- பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கோடம்பாக்கம் மண்டலத்தில், எம்.ஜி.ஆர் கால்வாய், ஜாபர்கான்பேட்டை கால்வாய் மற்றும் அடையாறு முகத்துவார பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
வெள்ளத்தடுப்பு பணிகள் ஆய்வு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138-க்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி சாலை உள்ள எம்.ஜி.ஆர். கால்வாய், வார்டு 139-க்கு உட்பட்ட ஜாபர்கான் பேட்டை கால்வாய், அடையாறு முகத்துவாரத்தில் எம்.ஜி.ஆர். கால்வாய் கலக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளத்தடுப்பு பணிகள்:

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், பருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் பொதுமக்களை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாத்திடும் வகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீர் வழிக் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், தடுப்பு சுவர் கட்டுதல், தடுப்பு சுவர் உயர்த்திக் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138-க்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி சாலை அருகே எம்.ஜி.ஆர் கால்வாயில் ரோபோடிக் எக்ஸ்வேட்டர் எந்திரம் மூலமாக மண்துகள்கள், கழிவுகள் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டு, விரைந்து பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், அடையாறு முகத்துவாரத்தில் எம்.ஜி.ஆர். கால்வாய் கலக்கும் பகுதியினை மாநகராட்சி கமிஷனர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எம்.ஜி.ஆர். கால்வாய் கலக்கும் அடையாறு முகத்துவாரத்தில் மண்மேடுகள் ஏற்படாதவாறும், எளிதாக தண்ணீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்பே முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வார்டு 139-க்கு உட்பட்ட ஜாபர்கான்பேட்டை கால்வாயினை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கால்வாய் பகுதி முழுவதும் தூர்வாரி தூய்மையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் கலந்துரையாடிய மாநகராட்சி கமிஷனர், நீர்வழி கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தினசரி குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளரிடம் பொதுமக்கள் குப்பைகளை வழங்கிட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com