தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் - அண்ணாமலை

தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் என்று பெரம்பலூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்ப வேண்டாம் - அண்ணாமலை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறா. பாரிவேந்தருக்கு ஆதரவாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பெரம்பலூருக்கு நேற்று இரவு வந்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே சாலையில் திறந்த வேனில் பாரிவேந்தருடன் நின்றபடி அண்ணாமலை பிரசாரம் செய்தார். அண்ணாமலை பொதுமக்களிடையே பேசுகையில், " மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு கொடுத்த எம்.பி. நிதியை மக்களுக்கு முறையாக பயன்படுத்தியுள்ளார். மேலும் அவர் தொகுதியை சேர்ந்த 1,200 மாணவ-மாணவிகளுக்கு தனது கல்வி நிறுவனங்களில் இலவச உயர்கல்வி அளித்துள்ளார்.

மீண்டும் அவர் வெற்றி பெற்றால் தொகுதியை சேர்ந்த 1,500 குடும்பங்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து வசதி தொடங்குவதற்கு பாரிவேந்தர் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார். இதனால் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ரெயில் போக்குவரத்து சேவை நிச்சயமாக தொடங்கப்படும். தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட தந்தை-மகனுக்கு மாறி, மாறி வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் தி.மு.க.வை நம்பாதீர்கள். தமிழகத்துக்கு பிரதமர் மோடியை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தியவர் பாரிவேந்தர். இதனால் பாரிவேந்தருக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய பெரும்பலூருக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com