

புதுடெல்லி,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதன்பின்னர் இந்த வழக்கு டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் ஆகியோர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது.
வழக்கில் இருந்து நத்துசிங், லலித் குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
டி.டி.வி. தினகரன் மீதுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.