இரட்டை இலை சின்னம் பேரம் ஓய்வுபெற்ற மேலும் 2 பேருக்கு டெல்லி போலீஸ் சம்மன்

இரட்டை இலை சின்னம் பேரம் ஓய்வுபெற்ற அதிகாரி மோகன ரங்கம் , வோடபோன் மேலாளர் பிலிப்ஸ் டேனியல் ஆகியோருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
இரட்டை இலை சின்னம் பேரம் ஓய்வுபெற்ற மேலும் 2 பேருக்கு டெல்லி போலீஸ் சம்மன்
Published on

சென்னை,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை கைது செய்தனர். டி.டி.வி.தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார். இருவரையும் நேற்றுமுன்தினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் விசாரணை நடத்துவதற்காக அவர்களை தங்கள் காவலில் எடுத்தனர்.

தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் விசாரணைக்காக டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் உள்ளிட்ட 9 பேர் குழுவினர் நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

இருவரும் அங்கிருந்து நேராக பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறிது நேரம் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு இருவரையும் தனித்தனி காரில் போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, போலீஸ் காரில் ஏறுமாறு தினகரனை டெல்லி போலீசார் வலியுறுத்தினர். அதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்த போதிலும், போலீஸ் காரிலேயே அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னால் வந்த காரில் மல்லிகார்ஜூனா பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்.

வீட்டின் உள்ளே தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தினகரனின் மனைவி அனுராதாவிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தினகரனிடம் டெல்லி போலீசார் நேற்று பல்வேறு கேள்விகளை கேட்டு சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இதேபோல் மல்லிகார்ஜூனாவிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

டெல்லி போலீசார் இன்று ஆதம்பாக்கம், நிலமங்கை நகர், வள்ளலார் தெருவில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான மன்னார்குடியைச் சேர்ந்த மோகனரங்கம் வீட்டுக்கு சென்றனர். மோகனரங்கம் வீட்டு வசதி வாரிய பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.டி.டி.வி.தினகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே இன்று அவரது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

காலை 11.45 மணிக்கு தொடங்கிய விசாரணை 1 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் வெளியே வந்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போலீசார் சென்றதும் மோகனரங்கத்தின் மனைவி வசந்தி வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, பல ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பதால் போலீசார் விசாரித்து விட்டு சென்றனர் என்றார்.

வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் அவர் கூறினார்.ஆதம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி மோகன ரங்கத்தின் வீட்டில் சோதனை நடத்திய பின்னர் போலீசார் போரூர் பகுதிக்கு சென்றனர்.

அங்கு தினகரனுக்கு நெருக்கமான சிலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி போலீசார் சென்னையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓய்வு பெற்ற அதிகாரி மோகன ரங்கத்திற்கும் கொளபக்கத்தைச் ஏந்ர்த பிலிச் டேனியல் என்பவருக்கும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். பிலிப்ஸ் டேனியல் வோட போன் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com