

சென்னை,
தமிழம் தலைமை தேர்தல் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டு உள்ள அறிககையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்ட சபை தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி கடந்த 28, 29-ந்தேதிகளில் நடைபெற்றது. இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் பொறுப்புகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான பணிகளைத்திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும். நடை முறைகளைச் சரியாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும். சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதிசெய்வதே இந்தப்பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும். சட்டசபை தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தி உள்ளது.
அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1700 என்பது ரூ.3 ஆயிரம் ஆகவும், வாக்குப்பதிவு அலுவலருக்கு ரூ.1300 என்பது ரூ.2600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளருக்கு ரூ.850 என்பது ரூ.1500 ஆகவும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ.650 என்பது ரூ.1400 ஆகவும், நுண்பார்வையாளருக்கு ரூ.1000 என்பது ரூ.2 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன. நேற்றைய நில வரப்படி, இக்குழுக்களால் ரூ.61.98 கோடி, ரூ.1.17 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.8.39 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்டவை ரூ.27.51 கோடி மதிப்பிலான இலவசமாக வழங்க வைத்திருந்தவை உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.