

மதுரை,
மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நெல்லை-கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி-கடம்பூர் ரெயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.02627/02628) வருகிற 28-ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 02631) வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து சென்னை புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.02632) வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மதுரையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை செல்லும் பகல்நேர சிறப்பு ரெயில் (வ.எண்.06321/06322) வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் மதுரையில் இருந்து இயக்கப்படும்.
பெங்களூருவில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.07235) வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு புறப்பட வேண்டிய ரெயில் (வ.எண்.07236) வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக நள்ளிரவில் கோவை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.02667) வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.02668) வருகிற 25, 26, 27 ஆகிய நாட்களில் மதுரை வரை இயக்கப்படும்.
மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.06236) வருகிற 27-ந் தேதி மதுரை வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்ல வேண்டிய ரெயில் (வ.எண்.06235) வருகிற 28-ந் தேதி மதுரையில் இருந்து புறப்படும்.
மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லை வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண். 06071) வருகிற 25-ந் தேதி விருதுநகர் வரை இயக்கப்படும்.
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06127) வருகிற 24, 25, 26, 28-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக நெல்லைக்கு இயக்கப்படும். அங்கிருந்து குருவாயூர் புறப்பட்டு செல்லும்.