நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 27-ந்தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன் பேரில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம், மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது. இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு;-

இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது.

இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com