தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டது

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக சென்றது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை சரிசெய்து நடவடிக்கை எடுத்தனர்.
தாழ்வாக சென்ற மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டது
Published on

கோத்தகிரி, 

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக சென்றது. இதுகுறித்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை சரிசெய்து நடவடிக்கை எடுத்தனர்.

மின் கம்பிகள்

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை நீலகிரி மாவட்டத்தை சமவெளி பகுதிகளுடன் இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையில் தினமும் சமவெளி பகுதிகளில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலையில் மாமரம் பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. அதன் எதிரே சாலையோரத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றன. அப்பகுதி காட்டெருமை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் செல்லும் வழித்தடமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் சாலையோரம் நின்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

சரிசெய்யப்பட்டது

இந்தநிலையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் அருகே உள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்கள் மீது படும் வகையில் இருந்தது. இதனால் மின் கசிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் மற்றும் வனவிலங்குகள் மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்து வந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என்பது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஆபத்தான வகையில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாழ்வாக சென்ற மின் கம்பிகளை சரிசெய்து உயரமாக செல்லும் வகையில் அமைத்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் மூலம் சாலையோரம் அடர்ந்து வளர்ந்து இருந்த புதர் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com