

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பா.ம.க. சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும் எனது வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
தமிழக அளவில் 2-வது இடத்தையும், தேசிய அளவில் 47-வது இடத்தையும் பிடித்துள்ள மாணவி ஐஸ்வர்யா கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் எனக்கு அறிமுகமான குடும்பம். அதேபோல் தேசிய அளவில் 36-வது இடத்தை பிடித்துள்ள காரைக்காலை சேர்ந்த மாணவி சரண்யா புதுச்சேரியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
தமிழக அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.