டாக்டர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்; நாளை வீடு திரும்புவார் - ஜி.கே.மணி
டாக்டர் ராமதாசை பார்க்க யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம் என்று ஜி.கே.மணி கூறினார்.
சென்னை,
அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உடல்நலக்குறைவு காரணமாக டாக்டர் ராமதாஸ் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ராமதாசுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லை என்றும் உடல் நலமாகவும் உள்ளார் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் ராமதாஸ் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார்.
குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதனை தொடர்ந்து ராமதாஸ் மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் உடல்நிலையில் சிறிய மாற்றத்தை உணர்ந்த மருத்துவர் அய்யா, நேற்று மாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர். அதன்பேரில் ராமதாசுக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பரிசோதனையில் மருத்துவர் அய்யா உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார்; மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். நாளை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். டாக்டர் ராமதாசை பார்க்க யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம். அய்யா நலமுடன் உள்ளார்; தைரியமாக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.








