‘ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் கொண்டு வாருங்கள்’ டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
‘ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் கொண்டு வாருங்கள்’ டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இச்சிக்கலில் இந்த ஆண்டும் தமிழகத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க முன்வராத மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தவறான நம்பிக்கையை அளித்து அவர்களின் போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடும், வீரத்தோடும் கலந்து விட்ட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த இரு ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த மத்திய, மாநில அரசுகள், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்தன.

பேரணி


ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து தமிழக மக்களுக்கு தவறான நம்பிக்கை ஊட்டி வந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது அவசர சட்டம் பிறப்பித்தால் அது தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். இவை எதுவுமே உண்மையான அக்கறையுடன் சொல்லப்பட்டவையல்ல... மாறாக தட்டிக்கழிக்கும் நோக்குடன் சொல்லப்பட்டவை தான். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் கடும் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் இம்முறை எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தி விடும் முனைப்பில் உள்ளனர். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சென்னை கடற்கரையிலும், மதுரையிலும் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதும், தமிழகத்தில் பெரும்பாலான அரசு கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு பேரணியாக சென்றதும் இந்த உணர்வையே பிரதிபலிக்கின்றன.

அவசரச்சட்டம்


பல அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையை மீறி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இதைத் தடுக்கவும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் வசதியாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் வசதியாக மத்திய அரசு உடனடியாக அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com