தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்கப்போவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தித்தான் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கும் குறைவாக தமிழக அரசால் முன்வைக்கப்படும் எந்த ஆதாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது.

இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த போதிலும், நியாயமான காரணங்கள் இருந்தால், கூடுதல் இடஒதுக்கீட்டை அனுமதித்தே வந்திருக்கிறது. உதாரணமாக, மேகாலயாவில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய சித்தராமையா அரசு, கர்நாடகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அதன்படி இடஒதுக்கீட்டின் அளவும் 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தது.

தமிழகத்திலும் அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை 87 சதவீதமாக அதிகரிக்க முடியும். அதுதான் சட்டப்படி செல்லக்கூடிய நடவடிக்கையாகவும் அமையும்.

எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்து அதற்கு நீதிமன்ற ஒப்புதலையும் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com