திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

செந்துறை அருகே திரவுபதி அம்மன் கோவில் திருவிழா முடிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Published on

திருவிழா முடிந்தது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில். இக்கோவில் தீமிதி திருவிழா கடந்த 22-ந்தேதி நடந்தது.

8 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த கோவில் தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மஞ்சள் விளையாட்டு விழா மற்றும் 25-ந்தேதி பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். திருவிழாவின் நிறைவில் விலை உயர்ந்த சாமி சிலைகள் மற்றும் நகைகளை அதே ஊரில் உள்ள பஜனை மடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டினர். உண்டியலை நேற்று திறக்க முடிவு செய்து இருந்தனர்.

உண்டியல் பணம் கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலுக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனே இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, செந்துறை போலீசில் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலானது கோவிலில் இருந்து சிறிது தூரத்திற்கு தூக்கி செல்லப்பட்டு அங்கு உடைக்கப்பட்டு காணிக்கை பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கேயே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து செந்துறை போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து மாமநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. திருவிழா நிறைவு பெற்ற அன்று இரவே கொள்ளையர்கள் குறிவைத்து உண்டியலை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com