

நெல்லை,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் முஹம்மது முபாரக், தேர்தல் பணிகளுக்குப் பின் இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்கு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாகத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு, தொண்டர்கள் திரளாகத் திரண்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
நெல்லை மாநகர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டார். மேலும் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா, மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர்ஷா, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் இம்ரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரியாஸ் அஹ்மது, தொழிற்சங்க மண்டல தலைவர் ஹைதர் இமாம், வர்த்தகர் அணி மண்டல தலைவர் ஹயாத் முகம்மது, மாவட்ட தலைவர் சிட்டி சேக் நெல்லை தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில், செயலாளர் பயாஸ், பாளை தொகுதி தலைவர் சலீம்தீன், செயலாளர் மின்னதுல்லா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது நெல்லை முபாரக் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களும், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளும் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரப்படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி.
நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னம் நிச்சயம் உதிக்கும். தமிழக மக்கள் மாற்றத்தை விட முன்னேற்றத்தையே விரும்புகின்றனர். "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்கிற முழக்கம் தமிழகத்தின் வளர்ச்சிக்கான குரலாக ஒலிக்கிறது. தமிழகத்தின் நலன், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்திச் செயல்படும் கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
தமிழகத்தை ஏற்கனவே வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்ற அரசு, அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் நல்லாட்சி அமையும்.
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் படும் அவதிகளை களைந்திட வேண்டும்:
ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம், உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. போர்க்களத்தில் தற்போது தற்காலிகமாக அமைதி நிலவினாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் இன்னும் தணிந்தபாடில்லை. குறிப்பாக, தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு என்பது தொடர் கதையாகவே உள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு உருளைகள் மட்டுமின்றி, சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர்கள் கிடைப்பதிலும் பொதுமக்கள் அன்றாடம் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிலிண்டர் முன்பதிவு செய்வதில் நிலவும் தொடர் குளறுபடிகளால், தங்களின் அடிப்படைத் தேவையான எரிவாயுவைப் பெற மக்கள் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது குறித்து நுகர்வோர் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பான பதிலை அளிப்பதில்லை என்ற அதிருப்தியும் பரவலாக எழுந்து வருகிறது. இந்தச் சூழல் தொழில் துறையில் மிகப் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதோடு, சிறு வணிகர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
எரிவாயு உருளைகளைக் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. எனவே, சர்வதேச அளவில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலை நிரந்தரமாக்க இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தீவிர ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டை சீர்செய்யும் வகையில் தொலைநோக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் இந்த இன்னல்களைப் போக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.