

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ம.தி.மு.க. சார்பில் சென்னையில் நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த ஊர்வலத்தில் கட்சி துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், கழக குமார், ஜீவன், பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், எம்.ஈ.நாசர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே புறப்பட்ட அமைதி ஊர்வலம் கருணாநிதி சமாதியில் நிறைவடைந்தது. கருணாநிதி சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் வைகோ மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் திராவிட இயக்க போர்வாளான கருணாநிதி நம்மை விட்டு மறைந்திருக்கிறார். ஆனால் அவரது புகழுக்கு என்றும் அழிவு கிடையாது. சமூக நீதிக்கான கலங்கரை விளக்கமாகவும், இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் சக்தியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி.
அவரது அன்பு தம்பியாய், இயக்க சேவகனாய், திராவிட இயக்கத்தின் படை கருவியாக என்றும் நான் இருப்பேன். திராவிட இயக்கத்திற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் நானும், ம.தி.மு.க.வும் எதிர் நின்று போர் தொடுத்து அந்த சதியை முறியடிப்போம் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.