

திருச்சி, தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளில் நடந்த தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் இருந்து தஞ்சை சென்ற அவர் அங்கு இரவு தங்கினார்.
நேற்று காலை தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரி வடிகாலில் 3.5 கி.மீ. தூரத்திற்கும், மேலவண்ணிப்பட்டி வாய்க்காலில் 8.9 கி.மீ. தூரத்திற்கும் நடந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
குறுவை சாகுபடிக்காக தயார் செய்து உள்ள விதைநெல், பூச்சிக்கொல்லி மருந்து, நாற்றங்கால் இருந்த சிறிய அரங்கை பார்வையிட்டார்.
விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள முள்ளம்பள்ளம் வாய்க்கால் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் ஆய்வு செய்த இடங்களில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பார்வையிட்டார்
அதன் பிறகு, அங்கிருந்து காரில் திருச்சி வந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் அரியூர் ஊராட்சி செங்கரையூர் கூழை ஆற்றில் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ஆலங்குடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து, புள்ளம்பாடி ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சி இருதயபுரம் கிராமத்தில் நந்தியாறு தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
செங்கரையூர் கூழையாற்றில் ஆய்வு செய்த முதல்-அமைச்சரிடம், அப்பகுதி மக்கள், எங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிப்படைகிறோம். மேலும் பஸ் வசதி வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடைபெற்ற பணிகள்
திருச்சி மண்டலத்தை சார்ந்த பாசன ஆதாரங்களில் மொத்தம் ரூ.90 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 773.13 கிலோ மீட்டர் தூரத்துக்கு 691 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் திருச்சி மாவட்டத்தில் ரூ.15 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 69 லட்சம் மதிப்பில் 31 பணிகளும், கரூர் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 48 லட்சம் மதிப்பில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பில் 13 பணிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பில் 39 பணிகளும் அடங்கும்.
இவற்றில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள செங்கரையூர் கூழை ஆற்றில் ரூ.23 லட்சம் செலவில் தூர்வாரும் பணியும், புள்ளம்பாடி அருகே நந்தியாற்றில் ரூ.1 கோடியே 94 லட்சம் செலவில் தூர்வாரும் பணியும் முடிவடையும் தருவாயில் உள்ளன.
கலந்து கொண்டவர்கள்
முதல்-அமைச்சர் ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.பி.க்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் எ.சவுந்திரபாண்டியன் என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின்குமார், ஜவாஹிருல்லா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சச்சேனா, தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
--------