"மது, போதைப்பொருளை அடியோடு அகற்ற வேண்டும்"

இளைஞர்கள் ஆயுதம் எடுப்பது சாதாரணமாகிவிட்டது என்றும், மது, போதைப்பொருளை அடியோடு அகற்ற வேண்டும் எனவும் மதுரையில் வைகோ கூறினார்.
"மது, போதைப்பொருளை அடியோடு அகற்ற வேண்டும்"
Published on

இளைஞர்கள் ஆயுதம் எடுப்பது சாதாரணமாகிவிட்டது என்றும், மது, போதைப்பொருளை அடியோடு அகற்ற வேண்டும் எனவும் மதுரையில் வைகோ கூறினார்.

திராவிட மாடல்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட மாடல் அரசை சகோதரர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி, தற்போது 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன.. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்திருக்கிறார். நாளுக்குநாள் மக்கள் மத்தியில் திராவிட மாடல் அரசுக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை தாங்கிக்கொள்ள முடியாமல் இந்துத்துவா சக்திகள் இருக்கின்றன. மகாத்மாவை சுட்டுக்கொன்ற கொடியவனுக்கு ஊர்வலம் எடுக்கின்ற அளவுக்கு வடநாட்டில் இந்துத்துவா சக்திகள் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றன.

மத்திய அரசால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. இதை தடுப்பதற்கு திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக சேர்ந்து இன்னும் வலுவான கட்டமைப்பை அமைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.

இந்துத்துவா சக்திகளின் கையில் இந்த நாட்டை ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை கடுமையாக தடுக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.

பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தில் உண்மை வெளிவரும். நீதி நிலைநாட்டப்படும் என்று நான் நம்புகிறேன்.

மது - போதை

இந்த ஆட்சியில் மட்டுமல்ல, கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடைபெறத்தான் செய்தன. இளைஞர்கள் எளிதாக ஆயுதங்களை எடுப்பதும், கொலை செய்வதும் சாதாரணமாக ஆகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைமை இல்லை, இதற்கு போதைப்பொருள் மிக முக்கிய காரணம்.

மதுவும், போதைப்பொருளும் அடியோடு அகற்றப்பட வேண்டும். இதற்காகத்தான், நான் மதுவை எதிர்த்து பிரசார பயணம் மேற்கொண்டு, எங்கள் கிராமத்தில் மக்களை திரட்டி மதுக்கடையை உடைத்து, அதை நாங்கள் அகற்றினோம்.

நேதாஜி எப்படி மறைந்தார்? என்பது இன்றுவரை மர்மமாக இருக்கிறது. எனவே இதைப்பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாமல், உலகமே இன்னும் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாத நிலையில், அவருக்கு நினைவுநாள் கடைபிடிப்பது அறியாமையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com