ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு: தமிழக அரசுக்கு மத்திய மந்திரி பாராட்டு

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கு மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு: தமிழக அரசுக்கு மத்திய மந்திரி பாராட்டு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். சென்னையில் அவர், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளைச் சேர்ந்த 79 ஆயிரத்து 395 ஊரக குடியிருப்புகளில் உள்ள சுமார் 1 கோடியே 27 லட்சம் வீடுகளில் இதுவரை 46 லட்சத்து 33 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும், அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுக்கட்டிடங்களுக்கு 100 சதவீத குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும் மத்திய மந்திரி பாராட்டினார். மேலும், இக்குடிநீர் இணைப்புகளை உரியமுறையில் பராமரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

இத்திட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், பாதுகாக்கவும் மற்றும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். மேலும் அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக தனி கிராம திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மக்களின் சுகாதார வாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட தனி நபர் கழிப்பறைகள் மற்றும் சமுதாய வளாகங்களை கட்டி மக்களை பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.366.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் திட மற்றும் திரவக்கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்திட ஏதுவாக பற்பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை மத்திய மந்திரி பாராட்டினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com