36 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

தஞ்சை மாவட்டத்தில் 36 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
36 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் 36 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

பனைவிதைகள்

தஞ்சை ஊராட்சி ஒன்றியம் ஆலக்குடி ஊராட்சி மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுடன் இணைந்து பனை விதைகள் நடும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்மூலம் அனைத்து வட்டாரங்களுக்கும் 36 ஆயிரம் பனை விதைகள் மற்றும் பனைகன்றுகள் 250 வரப்புகளில் சாகுபடி செய்வதற்காக 100 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு விவசாயிக்கு 500 பனைவிதைகள் மற்றும் பொது இடத்திற்கு 100 பனை விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளும் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அங்கன்வாடி கட்டிடம்

தொடர்ந்து திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியிலுள்ள ஏரிக்குளக் கரையில் பனைவிதைகளை நடும் பணிகள் குறித்தும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியலிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம், சமையலறையில் உணவு தயாரிக்கும் முறை குறித்தும், விண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் சுக்காம்பார் கிராமம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் கனிமொழி, முத்தமிழ்செல்வி, தாசில்தார்கள் சக்திவேல்(தஞ்சை), பெர்ஷியா(பூதலூர்). வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், கென்னடி., காந்திமதி, பொற்செல்வி, ராஜா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் வக்கீல் ஜீவக்குமார், கோவிந்தராஜ், ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com