

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனா குப்பம் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனா குப்பம் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுமட்டுமின்றி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் அரைகுறை குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த அசுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவதால் கிராமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று (திங்கட்கிழமை) காலை உளுந்தூர்பேட்டை அருகே காலி குடங்களைச் சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, தூய்மையான குடிநீர் தடையின்றி கிடைக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.