

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது மத்திய, மாநில திட்டங்களுடன் பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யு.சி.எப். திட்டம் குறித்தும், இத்திட்டத்தின்கீழ். தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த வாய்ப்புள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சிங்கார சென்னை 2.0, நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளிலும் குடிநீர் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, தினசரி குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்து 5 ஆண்டுகளுக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
அடையாறு மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்து, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள தடுப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைக்காக ஸ்பாஞ்ச் பூங்காக்கள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், தலைமைச்செயலாளர் மு.சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை கூடுதல்
தலைமைச்செயலாளர் எம்.ஏ.சித்திக், மேலாண்மை இயக்குனர் கே.விவேகானந்தன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் த.ஆனந்த், நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி. சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பேரூராட்சிகள் இயக்குனர் எம்.பிரதீப் குமார், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர்-செயலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பா.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.