

சென்னை,
சோழிங்கநல்லூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 20 முதல் 29-ஆம் தேதி வரை சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 199-க்கு உட்பட்ட டி.என்.எச்.பி.ஏ. பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாய் வழித்தடத்தை மாற்றியமைக்கும் பணிகள் செப்டம்பர் 20 முதல் 29-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பணிகளின் காரணமாக மண்டலம் 13 மற்றும் மண்டலம் 14-க்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடையாறு மண்டலத்துக்குட்பட்ட வேளச்சேரி மற்றும் மண்டலம் 14-க்கு உட்பட்ட உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியம்பேட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட உள்ளன.
பொதுமக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், செம்பரம்பாக்கத்தில் உள்ள 530 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் மாற்று குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
குடிநீர் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் ஏற்பட உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.