கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்

மயிலாடுதுறை நகர் அருகே உள்ள ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்
Published on

மயிலாடுதுறை நகர் அருகே உள்ள ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-வடவீரபாண்டியன் (காங்) : பிரதம மந்திரிவீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாக்டர்கள்

சந்தோஷ்குமார்(அ.தி.மு.க.) : பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 2 வருடமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது. நிதி இல்லை என்று கூறுகிறார்கள். எப்போது பணம் கிடைக்கும். பல வீடுகளின் பணிகள் பாதியில் நிற்கிறது. மேற்கொண்டு கட்டுமான பணிகள் தொடங்க பணம் கிடைக்காமல் பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.காந்தி (தி.மு.க.) : காளி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. காளி ஆரம்பசுகாதார நிலையத்துக்கான ஆம்புலன்ஸ் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

மோகன்(தி.மு.க.): மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவக்குமார்(தி.மு.க.): மாப்படுகை கங்கை அம்மன்தெரு, பண்ணைத்தெரு, அழகர்நகர் பகுதிகளில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்குகாய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கும், கொசுவை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.ஆணையர் அன்பரசன்: பொறியியல் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு துணை தலைவி மகேஸ்வரி முருகவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com