டேங்கர் லாரியில் 4 டன் பாமாயிலை திருடிய டிரைவர், கிளீனர் கைது

புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டேங்கர் லாரியில் 4 டன் பாமாயிலை திருடிய டிரைவர், கிளீனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
டேங்கர் லாரியில் 4 டன் பாமாயிலை திருடிய டிரைவர், கிளீனர் கைது
Published on

புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட டேங்கர் லாரியில் 4 டன் பாமாயிலை திருடிய டிரைவர், கிளீனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆயில் மில்

வில்லியனூர் மணவெளியில் தனியார் ஆயில் மில் உள்ளது. இந்த ஆயில் மில் சென்னை முகப்பேரில் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் நிறுவனத்திடம் எண்ணெய் வேண்டுமென ஆர்டர் கொடுத்தது.

அதன்பேரில் அந்நிறுவனத்தில் பாமாயில் தொழிற் சாலையில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்துக்கு (29.96 மெட்ரிக் டன்) சமையல் எண்ணெய் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் கடந்த மாதம் இறுதியில் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது.

இந்த லாரியை செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக பாலசுப்பிரமணியன் பணியில் இருந்தார். ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் இந்த டேங்கர் லாரி புதுச்சேரி தனியார் ஆயில் மில்லுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் லாரி வராததால் சந்தேகம் அடைந்த புதுச்சேரி ஆயில் மில் நிர்வாகத்தினர், முகப்பேர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

4 டன் பாமாயில் திருட்டு

இதுபற்றி லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரித்த போது சென்னை மாதவரம் பகுதியில் டேங்கர் லாரி கேட்பாரற்று நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று டிரைவர் மூலம் லாரி புதுச்சேரி ஆயில் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு லாரியை சோதனையிட்டபோது சுமார் 4 டன் சமையல் எண்ணெய் திருடப்பட்டு இருப்பதும், இதை மறைக்க தண்ணீரை அதில் கலந்து மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் தண்ணீர் கலந்ததால் அந்த சமையல் எண்ணெய் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் ரூ.40 லட்சம் மதிப்பிலான பாமாயில் வீணானது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முகப்பேர் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர் கேசவய்யா வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட டிரைவர், கிளீனரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அவர்கள், செங்கோட்டையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின் பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் செங்கோட்டை விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த டிரைவர் கருப்பசாமி, கிளீனர் பாலசுப்பிரமணியன் இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

நேற்று வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் மோசடி தொடர்பாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இவர்கள் கொள்ளையடித்த 4 டன் ஆயிலை யாரிடம் விற்றனர்? அதை வாங்கிய நபர் யார், இந்த மோசடியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com