ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம் - காவல் நிலைய மரணம் என குறிப்பிட்டு சிபிசிஐடி வழக்குப்பதிவு

பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயம் இருந்தது தெரியவந்தது.
காவல் நிலைய மரணம் என குறிப்பிட்டு சிபிசிஐடி வழக்குப்பதிவு
Published on: 

மதுரை,

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி காவல் நிலைய மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளது.

தேனி உத்தமபாளையம் அருகே டி அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் ஏலக்காய் மூடைகளை ஏற்றி வந்த வாகனம் தீ விபத்துக்குள்ளானது. இது தொடர்பான விசாரணைக்காக மதுரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தனது சட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், இதில் அவரது உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயம் இருந்தது தெரியவந்தது. கழுத்தின் இடது பக்கம் சாய்வான கயிறு தடம், வலது பக்கம் 3 சிராய்ப்பு காயங்களும் இருந்தன. கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியது போன்ற 3 அடையாளங்ள் இருந்ததாகவும், முதுகு பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயம் இருந்ததாகவும், மூளை 1,400 கிராம் எடையுடன் கூடுதல் வீக்கமாகவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதே போன்று பாலகிருஷ்ணனின் இதயம் 358 கிராம் வீக்கமாகவும், இடது முழங்கால் மற்றும் இடது கையில் சிராய்ப்பு காயங்களும் இருந்துள்ளது. நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவு தென்பட்டுள்ளன.

இதனிடையே பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இன்று மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் மரணமடைந்ததால் இதனை 'காவல் நிலைய மரணம்' என்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வழக்குப்பதிவில் வேறு யாருடைய பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

X