

சென்னை,
சென்னை போரூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (45 வயது), டிரைவர். இவர் நேற்று முன்தினம் நண்பரின் ஆட்டோவில் சென்றார். பின்னர் அவரது தம்பிக்கு தான் இறந்து விட்டால் உடலை யாரும் பெற வேண்டாம் அனாதை பிணம் என போலீசாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று செல்போனில் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதைப் பார்த்த தேவேந்திரனின் தம்பி உடனடியாக ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தார்.
அப்போது அவர், தேவேந்திரன் குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இறங்கி விட்டதாக தெரிவித்தார். தேவேந்திரனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த முந்திரி தோப்பில் அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து திருமுடிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தேவேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தேவேந்திரனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால் சரியில்லாமல் தாங்கி, தாங்கி நடந்ததாகவும், குடும்பத்தினர் அவரை கவனிக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தம்பிக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.