

அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 37), டிரைவர். இவரது மனைவி விஜயலெட்சுமி (26). தமிழ்செல்வன் இன்னும் ஓரிருநாளில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்தநிலையில், அன்னவாசல்-கீரனூர் சாலையில் கீழக்குறிச்சி ஆரஸ்பதிகாடு பகுதியில் தமிழ்செல்வன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.