200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் டிரைவர் கொலை - தொழிலாளி கைது

மாரிமுத்துவுடன் தங்கியிருந்த தொழிலாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் டிரைவர் கொலை - தொழிலாளி கைது
Published on

நாகர்கோவில்,

விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகில் உள்ள பள்ளவிளையில் ஒரு தனியார் ஏஜென்சி குடோனில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடன் வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் தங்கி சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று மாரிமுத்து நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த போது திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றிய தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் 174-வது பிரிவின்கீழ் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் அவரது பின்தலையில் காயம் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாரிமுத்துவுடன் தங்கியிருந்த தொழிலாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அதாவது சம்பவத்தன்று மாரிமுத்துவும் அவருடன் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மங்களா தெருவைச் சேர்ந்த சாலமன் துரைராஜ் (33) என்பவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்கள் இடையே ரூ.200 கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாலமன் துரைராஜ், மாரிமுத்துவை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவரது தலை அருகில் இருந்த கட்டிலில் மோதி காயம் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி தொழிலாளி சாலமன் துரைராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com