சமயோஜித புத்தியால்...பெரும் விபத்தை தடுத்த ஓட்டுநர்

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டுநரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீப்பற்றிய லாரி
Published on

திருத்தணி,

ஓடிக்கொண்டிருந்த லாரியில் தீ வேகமாகப் பரவிய நிலையில், ஓட்டுநர் மேற்கொண்ட சமயோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

திடீர் தீ விபத்து

திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி, தீப்பிடித்து குபு குபுவென எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், என்ஜின் பகுதியில் பற்றிய தீ மிக வேகமாக வாகனத்தின் மற்ற பகுதிகளுக்கும், பின்னால் இருந்த சரக்கு பெட்டகத்திற்கும் பரவத் தொடங்கியது.

ஓட்டுநரின் சாதுரிய செயல்

தீப்பற்றியதை உணர்ந்த ஓட்டுநர், சற்றும் பதற்றமடையாமல் உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்தினார். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவினால் முழு வாகனமும் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதையும், பின்னால் இருக்கும் பகுதிக்குத் தீ பரவினால் ஆபத்து அதிகம் என்பதையும் அவர் நொடிப்பொழுதில் உணர்ந்தார். உடனே துணிச்சலுடன் செயல்பட்ட அவர், லாரியின் கேபின் மற்றும் என்ஜின் பகுதியை, பின்னால் இருந்த சரக்கு ஏற்றிச் செல்லும் பகுதியிலிருந்து தனியாகப் பிரித்துவிட்டார்.

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து

ஓட்டுநர் என்ஜின் பகுதியை தனியாகப் பிரித்து அப்புறப்படுத்தியதால், பின்னால் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும், வாகனத்தின் பெரும் பகுதியும் தீயில் கருகாமல் முழுமையாகக் காப்பாற்றப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், என்ஜின் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

போலீசார் விசாரணை

ஓட்டுநரின் இந்த விரைவான மற்றும் சமயோஜிதமான செயலால் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெருக்கடியான நேரத்தில் பதற்றப்படாமல் சாதுரியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்த ஓட்டுநருக்கு பொதுமக்களும், அதிகாரிகளும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com