

நெல்லை,
அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின்பேரில் நெல்லையில் இரவில் 50 பயணிகளுடன் சென்னை ஆம்னி பஸ்சை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார்.போலீஸ் எச்சரிக்கையை தொடர்ந்து மீண்டும் இயக்கினார்.
நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். தொடர் விடுமுறையை பயன்படுத்தி இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னைக்கு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, டிரைவர் திடீரென பஸ்சை இருட்டிலேயே நடுவழியில் நிறுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 50 பயணிகள் என்ன ஏதென்று தெரியாமல் தவித்தனர்.
இதற்கான காரணம் குறித்து கேட்ட பயணிகளிடம், டிரைவர் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆத்திரமடைந்த பயணிகள் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அந்த வழியாக சென்ற ஒரு சிலர் நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், தச்சநல்லூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
நள்ளிரவில் பஸ்சை நிறுத்தியதற்கான காரணத்தை போலீசார் டிரைவரிடம் கேட்டனர். அதற்கு அவர், 'அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின்பேரில் எங்கள் பஸ்களை இயக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.இதனால் உரிமையாளர் பஸ்சை நிறுத்த சொல்லிவிட்டார். அதன் காரணமாகத் தான் நான் பஸ்சை இங்கு நிறுத்தி உள்ளேன். நீங்கள் அமைச்சரிடமோ அல்லது எங்கள் உரிமையாளரிடமோ பேசிக்கொள்ளுங்கள்' என்றார்.
இந்த பதிலை கேட்ட இன்ஸ்பெக்டர் விமலன், டிரைவரை எச்சரித்தார். 'யார் என்ன சொன்னாலும் சரி, முதலில் பஸ்சை இங்கிருந்து எடுக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். பஸ்சை எடுத்துக்கொண்டு சென் னைக்கு சென்று பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிடுங்கள். அதன் பிறகு உங்கள் கட்டண பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறி டிரைவரை பஸ்சை எடுக்க கூறினார். போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த கண்டிப்பான உத்தரவை தொடர்ந்து, வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை இயக்கினார். இதற்கிடையே டிரைவரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கூறுகையில், 'நெல்லையில் சிறப்பு பறக்கும் படை குழுவினர் எந்த சோதனையும் நடத்தவில்லை. ஆனால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் பஸ்சை எடுக்க மறுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறைக்கு அறிக்கை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.