ஒரு மணி நேரத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்து தரப்படும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

விண்ணப்பித்த, ஒரு மணி நேரத்தில் பழகுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்து தரப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்து தரப்படும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்த விவாதத்துக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு தேர்வுத் தளத்துடன் கூடிய சொந்தக் கட்டிடம் கட்டப்படும்.

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளுக்கு அச்சு பொறிகளுடன் கூடிய கணினிகள், பார்கோடு ரீடர் மற்றும் கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வாங்கப்படும்.

போக்குவரத்துத் துறையின் பயன்பாட்டிற்காக ஆன்டிராய்ட் செயலி உருவாக்கப்படும். வீட்டில் இருந்தபடி இணையதளம் வழியாக ஓட்டுனர் உரிமம் குறித்த பணிகளுக்கான கட்டணத்தை செல்போன் மூலம் செலுத்த முடியும்.

போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமங்கள் தொடர்பான பணிகளுக்கு செலுத்தும் அனைத்து கட்டணங்களும், பணமில்லா பரிவர்த்தனையாக இணையதளம் வழியாக வசூலிக்கப்படும்.

இணையதளம் வாயிலாக நடத்துனர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும். பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், மேற்குறிப்பு செய்தல், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்தில் செய்து கொடுக்கப்படும்.

வீட்டில் இருந்தபடி சம்பந்தப்பட்ட படிவங்களை இணையதளம் வழியாக ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி, அலுவலகம் வந்து புகைப்படம் எடுத்த பிறகு ஒரு மணி நேரத்தில் ஓட்டுனர் உரிமத்தை பெறலாம்.

சென்னையில் மின்கலன் (பேட்டரி) அல்லது மின்சாரத்தில் ஓடும் எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நோக்கத்தின் அடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பஸ்களையும் படிப்படியாக மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பஸ்களாக மாற்ற வழிவகை செய்யப்படும்.

இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

தமிழகத்தின் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ் வருகை நேரத்தை அறியும் நவீன தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்படும்.

மாநகர் போக்குவரத்துக்கழக பஸ்களில் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். முக்கிய பஸ் நிலையங்களில் பெரிய ஒளித்திரை தகவல் பலகை அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com