

சேலம்,
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 2,610 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து, விபத்தில்லா சேலையை உருவாக்கும் நோக்கில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, விபத்துகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியவர்களைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், லாரிகளில் அதிக பாரம் ஏற்றுதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக மொத்தம் 2,610 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சாலை விபத்துகளைக் குறைத்து, விபத்தில்லா சேலம் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.