டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க் கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், விடுதலை போராட்ட வீரர்கள், தமிழ் மொழிகாத்த மொழிப்போர் தியாகிகள், சமூக நீதிக்காக பாடுபட்ட சமூக நீதிக் காவலர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கவும், அவர்களின் நினைவுகளைப் போற்றவும் அவர்களின் பெருமைகளை எதிர்கால சந்ததியினர் அறிந்திடவும் தமிழக அரசு அவர்களுக்கு மணி மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவு சின்னங்கள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றை அமைத்து நல்லமுறையில் பராமரித்து வருகிறது.

மேலும், இப்பெருந்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களுடைய பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, ஆண்டு தோறும் கொண்டாடி பெருமை சேர்த்து வருகிறது.

தமிழக அரசால், பல்வேறு தலைவர்களுக்கு 71 மணி மண்டபங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத்தூண்கள் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் ஆகியவை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை, 20 மணிமண்டபங்கள், ஒரு நினைவுச் சின்னம், ஒரு அரங்கம் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டதோடு, 47 தலைவர்களின் பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவித்து ஆண்டு தோறும் சிறப்பாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டுக்கு உழைத்த நல்லோர் புகழ்பாடி, 7 மணிமண்டபங்கள், ஒரு திருவுருவச்சிலை, ஒரு நினைவுத்தூண், ஒரு நினைவாலயம், ஒரு நினைவிடம் என மொத்தம் 11 நினைவகங்கள் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

உண்மைக்கு மாறாக தொடரப்பட்ட வழக்குகளில் வெற்றி கண்டவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. பீனிக்ஸ் பறவையின் குணநலனை எடுத்துக்காட்டுகிற வகையில், மெரினாவில் எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் அவருக்கு ரூ.50.80 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தின் திறப்பு விழா மிக விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

சுவாமி சகஜானந்தா (ஜனவரி 27-ந்தேதி), ராமசாமி படையாச்சியார் (செப்டம்பர் 16), பட்டுக்கோட்டை அழகிரிசாமி (ஜூன் 23), உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு (பிப்ரவரி 6), பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் (செப்டம்பர் 24) ஆகிய பெரியோர்களின் பிறந்தநாள் விழாக்கள், முறையே கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் மஞ்சக்குப்பம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கோவை மாவட்டம் வையம் பாளையம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில், தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மேற்கூரை சீரமைத்தல் முதலான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வ.உ.சி. செக்கு சீரமைத்தல், ராஜாஜி நினைவாலயம் மற்றும் ராஜாஜி நூலகம் புனரமைத்தல் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள நினைவகங்களில் மின்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கலைவாணர் அரங்கம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகம் பல்நோக்கு கலையரங்கத்தில் உணவு அருந்தும் அறையின் மேற்கூரையின் உயரத்தை உயர்த்துதல், மின்சார இணைப்பினை மாற்றுதல், பாதாள சாக்கடை அமைப்பு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில், வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வைத்தல், அலுவலகக் கட்டிடம் கட்டுதல், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், 12 தங்கும் அறைகள், கழிவறைகள், மனமகிழ் அறை போன்ற வசதிகளுடன் 2-வது தளம் கட்டப்படும்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப் படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் செயல்முறை படப்பிடிப்பு பயிற்சிக்காகவும், குறும்படம் தயாரிப்புக்காகவும் அமைந்துள்ள மாணவர்களுக்கான படப்பிடிப்பு தளத்தில் நவீன முறையில் மாற்றியமைக்கும் மடங்கு அரங்கம் மற்றும் ஒளியமைப்பிற்கான பாதுகாப்பு நடைமேடை அமைக்கப்படும்.

தமிழரசு அச்சகத்தில் பணிபுரியும் ஆண், பெண் தொழில்நுட்பப் பணியாளர்களுக்காக தனித்தனியாக உணவு அருந்தும் அறை புதிதாக கட்டப்படும்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு நடத்தப்படும் சாலை மேம்படுத்தப்படும். இவ்வாறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com