சென்னையில் போலீஸ் ரோந்து வாகனத்தை கடத்தி சென்று விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமி கைது

கடத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனம் ஒரு வாடகை கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
சென்னையில் போலீஸ் ரோந்து வாகனத்தை கடத்தி சென்று விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமி கைது
Published on

சென்னை,

சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர், நேற்றுமுன் தினம் இரவு 8 மணியளவில், காவல்துறை வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென சாலையில் நிறுத்தப்பட்ட வாகனம் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டு இருவரும் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் கண் முன்னரே வாலிபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் கடத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனம் ராஜீவ் காந்தி மருத்துவமனை சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு வாடகை கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், வாலிபரை மடக்கிப் பிடித்து பெரியமேடு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் லிஜோ ஜோசப்(வயது 30) என்பதும், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

லாரி ஓட்டுனரான இவர், சம்பவத்தன்று குடி போதையில் இருந்துள்ளார். அப்போது போலீஸ் வாகனம் சாவியோடு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த லிஜோ ஜோசப், காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com