

வடபழனி,
சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள மசூதியில் நேற்று அதிகாலை இஸ்லாமியர்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், மசூதியின் கதவை உடைத்து, கண்ணாடிகளையும் நொறுக்கிவிட்டு உள்ளே புகுந்தார். பின்னர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒயர்களைப் பிடுங்கியதுடன், உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவரது கையில் கண்ணாடி குத்தி காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால், அவர் போதையில் போலீசாரை கேலி செய்தபடி, ஆபாசமாக பேசியதுடன், பாடல்களை பாடி ரகளையில் ஈடுபட்டார். மேலும், அங்கும் இங்கும் ஓடி, சுவர் ஏறிக் குதித்ததால் போலீசார் அவரைப் பிடிக்க சிரமப்பட்டனர்.
இதையடுத்து, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சிகிச்சைக்காக கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மசூதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.