தூத்துக்குடியில் பரபரப்பு: பெட்ரோல் பங்கை சூறையாடிய போதை ஆசாமிகள்

பெட்ரோல் பங்க் ஒன்றின் எரிபொருள் நிரப்புமிடத்தில் சிறுநீர் கழித்த நபரைத் தட்டிக்கேட்ட ஊழியரை போதை ஆசாமிகள் தாக்கி பெட்ரோல் பம்ப்பையும் அடித்து நொறுக்கினர்.
தூத்துக்குடியில் பரபரப்பு: பெட்ரோல் பங்கை சூறையாடிய போதை ஆசாமிகள்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையின் கீழே அரசடி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் எரிபொருள் நிரப்ப வந்தனர். அதில் ஒரு நபர் பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறையில் சென்று சிறுநீர் கழிக்காமல் பெட்ரோல் பங்க் அருகே வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும் பகுதி அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கே வேலை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிறுநீர் கழித்த நபரிடம் இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள் என்று சத்தம் போட்டு உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த 5 பேர் கொண்ட கும்பல் எங்களிடமே தகராறு செய்கிறாயா.. நாங்கள் யார் என்று தெரியுமா உங்களை எல்லாம் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி சென்றுள்ளனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் 10 பேருடன் வந்த அந்த கஞ்சா மது போதை ஆசாமிகள் பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்து ஊழியர்களை கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொண்டு சரமாறியாக தாக்கி உள்ளனர்.

மேலும் பெட்ரோல் பங்க் அலுவலகம் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றை அடித்து உடைத்து விட்டு தப்பி ஓடி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர் சவுரவ் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பெட்ரோல் பல்கை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com