

சென்னை,
சாலையில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராஜாஜி நகரை சேர்ந்தவர் உதயராணி. இவர் நேற்று தனது கணவர் சதிஷுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த போதை ஆசாமிகள் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததால் அருகிலுள்ள பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இதையடுத்து, உதயராணி மற்றும் அவரது கணவர் சதிஷ் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு சென்றனர். ஆனால், போதை ஆசாமிகள் அவர்களை பின் தொடர்ந்து வீட்டிற்கே சென்று சதிஷை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து வெளியே வந்த உதயராணியையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர், அருகிலிருந்த பொதுமக்கள் கூடி இரண்டு போதை ஆசாமிகளையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இது குறித்து உதயராணி மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இரண்டு போதை ஆசாமிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.