

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த கொடூர குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
மூன்று வயதே ஆன குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி முள்புதரில் வீசி சென்ற நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சுய நினைவுடன் இருப்பவர்களால் இதுபோன்ற அற்ப செயலில் ஈடுபட முடியாது. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது போதைப் பொருட்கள் பயன்பாடே காரணம்.
தற்பொழுது தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள்களை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போலவே இன்றைய ஆட்சியிலும் தொடர்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குற்றசெயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ள நிலையில் மேலும் உள்ள குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு அக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாக இருக்கும் போதை கலாசாரத்தை ஒழித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக மூடவேண்டும் என்று தமிழக அரசை, தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.