போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

போதை பொருள் சர்வசாதாரணமாக கிடைப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளதை காட்டுகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் போதைப் பொருட்களான மெத்தபேட்டமைன் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் அயல்நாட்டு கைதுப்பாக்கியோடு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசால் தடைசெய்பப்பட்டுள்ள போதை பொருள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக கிடைப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளதையே இது காட்டுகிறது.

மெத்தபேட்டமைன் பவுடரை பயன்படுத்துபவர்கள் மிகவும் எதிர்மறையான உடல்நல பாதிப்புகளை அடைவார்கள். சித்தப்பிரமை, பாலியல் உணர்வுகளை அதிகமாக தூண்டுதல், மற்றும் பதட்டம், விரைவான இதயத் துடிப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பக்கவாதம் அல்லது மரணம் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் மெத்தபேட்டமைன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மெத்தபேட்டமைன் மற்ற போதைப் பொருள்களைவிட அதிகமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும், குறைந்த அளவும் அதிகமான விலையும் கொண்டதாக உள்ளது. இது பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட பொருளாகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் மிகவும் எளிதாக கிடைப்பது மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

மெத்தபேட்டமைன் யாரிடம் இருந்து வருகிறது, அவர்களின் தலைமையிடம் எங்கே, சிறு, சிறு வியாபாரி மூலம் விற்பனை செய்பவர்களின் தலைவர் யார் என்பது கண்டுபிடிக்க முடியாத புதிராக இருக்கிறது. ஆனால் மெத்தபேட்டமைன் மட்டும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கிறது.

ஆகவே தற்பொழுது கைது செய்யப்பட்டுளவர்களை விட இந்த வியாபாரத்திற்கு ஆணிவேராக இருப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து கடுமையாக தண்டித்தால் தான் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இத்தாலி நாட்டை சேர்ந்த நாட்டு துப்பாக்கி இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் எங்கே செல்கிறது. இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது கேள்விக்குரியாகவும், கவலையாகவும் இருக்கிறது.

தமிழக அரசு போதை பொருட்களை தடுக்க தவறி இளைய தலைமுறை சீர்கெட காரணமாக இருக்கிறது. தமிழக அரச இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்து இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com