போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

வில்லிவாக்கத்தில் 6 டாஸ்மாக் கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
போதைப்பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழக சட்டசபையில் நேற்று அரசினர் தீர்மானம் வெற்றி பெற்ற பிறகு, ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து துறைகளை சார்ந்த அரசு உயர் அதிகாரகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்த முதல்-அமைச்சர் விஜய் எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வில்லிவாக்கத்தில் இன்று ஆய்வுக்கூட்டத்தை தொடங்கியுள்ளோம்.

நாங்கள் என்ன பணிகளை எல்லாம் செய்ய வேண்டும் என்பதை 3 பிரிவுகளாக பிரித்துள்ளோம். அதில் பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா விற்பனையை தடுப்பது, டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள சொல்லியிருக்கிறோம். காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் நான் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள மக்கள், போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக என்னிடம் கூறினார்கள். வில்லிவாக்கத்தில் 11 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 6 கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். நேற்று முதல்-அமைச்சர் விஜய் பிறப்பித்த உத்தரவின்படி ஒரு கடை மூடப்பட்டுவிட்டது.

டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, கள்ளச்சந்தையிலும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. அதையும் உடனடியாக கண்டறிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகள் அரசு சொன்ன நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். பெண்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்க சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு காவல் நிலையத்திலும், சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, காவல் நிலையத்தில் யார் புகார் அளித்தாலும் அதை வீடியோ பதிவு செய்யச் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்போது, இருதரப்பிற்கும் எதிர்காலத்தில் பிரச்சினைகள் இருக்காது.

அதோடு, வில்லிவாக்கத்தில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மின்தடை குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம். நீர் மேலாண்மையை பொறுத்தவரை, இங்கு சுமார் 60 சதவீத இடங்களில் குழாய்களே கிடையாது. ஒவ்வொரு வார்டிலும் என்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பது குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் எங்களிடம் சொன்னதை, தற்போது அதிகாரிகளிடம் அறிக்கையாக கொடுத்திருக்கிறோம்.

பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் மழைநீர் வடிகால் பணிகளை தொடங்குவார்கள். நம்முடைய இலக்கு ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், நவம்பர் முதல் அதிக அளவில் மழை பெய்யத் தொடங்கிவிடும். எனவே, மழை இல்லாத காலங்களில் வடிகால் பணிகளை முடிக்க சொல்லியிருக்கிறோம்.

வில்லிவாக்கத்தில் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது. வருவாய்த்துறையிடம் சொல்லி, எங்கெல்லாம் அரசு நிலங்கள் இருக்கிறதோ, அவற்றை வரையறை செய்து கொடுக்க சொல்லியிருக்கிறோம். இங்கு மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி திறக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.

ஒவ்வொரு இலாகாவிற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, வில்லிவாக்கம் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை அமைச்சர்களிடம் சொல்லி நிவர்த்தி செய்வோம். குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்த்து, கோப்புகள் எங்கே தேங்குகின்றன என்பதை கண்டறிய ஒரு டேஷ்போர்டு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். திட்டங்கள் அனைத்தும் சொன்ன நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

த.வெ.க.வின் பெயரை சொல்லியோ, அல்லது எனது பெயரை சொல்லியோ அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது. எந்த காண்டிராக்டருக்கும் த.வெ.க.விடம் இருந்து எந்த கமிஷனும் கொடுக்கப்படாது என்பதை பதிவு செய்திருக்கிறோம். முதல்-அமைச்சர் விஜய் எங்களிடம் இதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com