சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய 8 வயது சிறுமி கடத்தல் - போதை ஆசாமி கைது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்தி சென்ற போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய 8 வயது சிறுமி கடத்தல் - போதை ஆசாமி கைது
Published on

சென்னை,

வெளிமாநிலங்களில் வசிக்கும் மக்கள் தமிழகத்துக்கு வந்து பல்வேறு வேலை பார்க்கிறார்கள். அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷனிஜல் தாஸ் (56 வயது) என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கியிருந்து, விவசாய வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக திருச்சியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு அவர் குடும்பத்துடன் சென்னை வந்தார்.

இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளனர். மறுநாள் ஜார்கண்ட் மாநிலம் செல்லும் ரெயிலை பிடிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவர் அசந்து தூங்கிய நேரத்தில், அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகளான 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டார்.

அந்த சிறுமி கூச்சல்போட்ட பிறகும், ஷனிஜல் தாஸ் எழுந்திருக்கவில்லை. அவரது மனைவியும் தூங்கிவிட்டார். சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர், குடிபோதையில் இருந்துள்ளார். அவர் சிறுமியை, தோளில் தூக்கியபடி வால்டாக்ஸ் சாலையில் சென்றுள்ளார். சினிமா பாடல் பாடியபடி, சிறுமியை தோளில் வைத்துக்கொண்டே ஆட்டம்போட்டவாறு சென்றுள்ளார். அவர் தமிழில் பாட்டுப்பாட, பயந்த நிலையில் இருந்த சிறுமியோ இந்தியில் பேசி கூச்சல்போட்டு உள்ளார். சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் இதைப் பார்த்து கூட்டமாக கூடிவிட்டனர்.

போதை ஆசாமியிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் பெரியமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியமேடு போலீசார் விரைந்து வந்து, சிறுமியை கடத்தி சென்ற நபரையும், சிறுமியையும் அழைத்துச் சென்றனர். இதற்குள் சிறுமியின் பெற்றோர், சிறுமியை தேடியபடி சென்டிரல் ரெயில் நிலைய பகுதியில் அங்கும் இங்கும் பதறியபடி ஓடினார்கள். உடனடியாக போலீசார் சிறுமி பத்திரமாக இருப்பதாக, அவர்களிடம் தெரிவித்தனர். சிறுமியை கடத்திய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆசாமியின் பெயர் சசிகுமார் (42 வயது) என்பது தெரிய வந்தது. சென்னையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த அவர், பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சென்னையில் வேலைபார்த்துவிட்டு, பொன்னேரிக்கு செல்வதற்காக ரெயில் ஏறுவதற்கு புறநகர் ரெயில் நிலையம் வந்துள்ளார். நள்ளிரவு ஆகிவிட்டதால் புறநகர் ரெயில்நிலையத்திலேயே அவர் போதையில் சுற்றித் திரிந்துள்ளார்.

கைதான சசிகுமார் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "அவரது மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து சென்றதாவும், இதனால் ஏக்கத்தில் இருந்த அவர், சிறுமியை தூக்கி சென்று வளர்க்க ஆசைப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com