தூத்துக்குடியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டு பயிற்சி நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அடிப்படையில் அதனை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் உள்ள காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம், தாளமுத்துநகர், பசுவந்தனை, கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு, விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் கைப்பந்து விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்கள் முகாமிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து விளையாட்டு பயிற்சி நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த விளையாட்டு பயிற்சியின் தொடக்க நிகழ்வாக மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியளிக்கும் போலீசார், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட காவல்துறையினர் முன்னிலையில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து பின்னர் விளையாட்டு பயிற்சி துவங்கப்பட்டது.
மேற்சொன்ன 8 இடங்களில் நடந்து முடிந்த கைப்பந்து விளையாட்டு பயிற்சியின்போது சிறப்பாக பயிற்சி பெற்ற 8 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக காலணி (Shoe) வழங்கப்பட்டது. மேலும் மேற்சொன்ன பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்பின் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.