கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: மலேசியாவை சேர்ந்தவருக்கு 12 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கூரியர் மூலம் மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல்: மலேசியாவை சேர்ந்தவருக்கு 12 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 2 பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்களில் ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்புவது போன்று முகவரி இடம்பெற்றிருந்தது. இந்த பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் இதுகுறித்து கூரியர் நிறுவனத்தினர் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பார்சல்களை போலீசார் பிரித்து பார்த்தனர். அப்போது அந்த பார்சலுக்குள் இருந்த காலணியில் 82 கிராம் எடையுள்ள 'ஆம்பெடமைன்' எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் மலேசியாவைச் சேர்ந்த வாசுதேவ விமல் கலியபெருமாள் என்பவர் இந்த பார்சல்களை தஞ்சாவூர் முகவரியில் கூரியர் மூலம் மலேசியாவுக்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.பி.குமார், ஏ.செல்லத்துரை ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வாசுதேவ விமல் கலியபெருமாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com