

தூத்துக்குடி,
தூத்துக்குடி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசார் நேற்று (வியாழக்கிழமை) தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் சாலைப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த செய்யதுஇப்ராகிம் (வயது 44) என்பது தெரியவந்தது. அவர் தன்னிடம் இருந்த வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய மேல் விசாரணையில், தாளமுத்துநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி பாண்டிசெல்வி(40) என்பவர் இந்த மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகம் செய்தது தெரியவந்தது. பாண்டிசெல்வி ஒரு மருந்து கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருவதும், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து செய்யதுஇப்ராகிம் மற்றும் பாண்டிசெல்வி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 76 போதை மருந்து குப்பிகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வலி நிவாரணி மருந்துகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா? அல்லது உள்ளூர் இளைஞர்களைக் குறிவைத்து விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.