

சென்னை,
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக, மத்திய அரசு அதற்கான பிரசார செயல் திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் 272 மாவட்டங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அதில் தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நாமக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தவும், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பிரசார செயல்திட்டங்களை மேற்கொள்ளவும் மாநில அளவில் சிறப்புக்குழுவை அமைத்து சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது.
இந்த சிறப்புக்குழுவில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் செயலாளர் தலைவராகவும், போலீஸ் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த தலைவர்கள், முதன்மைச் செயலாளர்களின் பிரதிநிதிகளும், சமூக பாதுகாப்புத்துறையின் முன்னாள் கள அதிகாரியும், சென்னை இளைஞர், நீதிக் குழுமத்தின் முன்னாள் உறுப்பினருமான த.அழகப்பன் ஆகியோர் உறுப்பினராகவும், சமூக பாதுகாப்பு கமிஷனர் உறுப்பினர் செயலராகவும் உள்ளனர்.