

போரூர்,
போரூர், சுங்கச்சாவடி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் உதவி கமிஷனர் ரியாசுதின், இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை நடத்தினர்.
அதில் உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சசிகரன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 3 கிராம் மெத்தபெட்டமைன், பிராந்தி, பீர் உள்ளிட்ட 61 மது பாட்டில்கள், எடை மெஷின் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதி நாட்களில் இ.சி.ஆர் சாலையில் நடக்கும் விருந்துக்கு ஆர்டரின் பேரில் போதைப்பொருட்களை சப்ளை செய்வதற்கு கொண்டு வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பிடிபட்ட சசிகரனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.