மதுபோதையில் கார் ஓட்டி பைக் மீது மோதல்: வாலிபர் கைது

மதுபோதையில் வாகனம் ஓட்டி மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் கார் ஓட்டி பைக் மீது மோதல்: வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் விபத்துகுள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் கார் ஓட்டுநரான கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28) என்பவர் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி, இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு விபத்தை ஏற்படுத்தி காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி காயம் ஏற்படுத்திய நபர் மீது கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் வழக்காக பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து தங்களுக்கும், தங்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், அதனை மீறி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com