பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா..? - சிங்கப்பெண் போலீசாரிடம் மதுபோதையில் வக்கீல் வாக்குவாதம்

'உதவி செய்யத்தானே சிங்கப்பெண் படையில் இருக்கீங்க' என வக்கீல் வாக்குவாதம் செய்துள்ளார்.
பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா..? - சிங்கப்பெண் போலீசாரிடம் மதுபோதையில் வக்கீல் வாக்குவாதம்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்தில் சிங்கப் பெண் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா, போலீஸ் சவுமியா ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது காட்டுப்பரமக்குடி மேலத்தெருவை சேர்ந்த வக்கீல் வினோத் மிஸ்ரா (வயது 25) என்பவர் மது போதையில் அங்கு வந்துள்ளார்.

அப்போது அவர் “பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பா? ஆண்களுக்கு இல்லையா?. உங்கள் வாகனத்தில் என்னை ஏற்றி வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுங்கள்" என்று கேட்டுள்ளார். அதற்கு சிங்கப்பெண் படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா, தள்ளி நில்லுங்கள் என்று கூறியுள்ளார். உடனே வினோத் மிஸ்ரா, 'உதவி செய்யத்தானே சிங்கப்பெண் படையில் இருக்கீங்க' எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் பெண் போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அந்த வழியாக வந்தார். உடனே வினோத் மிஸ்ராவை பிடித்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். இதுகுறித்து சிங்கப்பெண் படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் வினோத் மிஸ்ராவை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com